பள்ளிகொண்டா அருகே, அகரம்சேரி காப்புக்காட்டில் பூங்கா அமைக்க முடிவு - மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி காப்புக்காட்டில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-12-27 22:00 GMT
அணைக்கட்டு, 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக ஏலகிரிமலை, அமிர்தி சிறுவன உயிரியல் பூங்காவும் இருந்தன. வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் இப்போது அமிர்தி மட்டுமே வேலூர் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்துக்கான இடமாக உள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பூங்கா அமைக்க கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் திட்டமிட்டனர். அத்துடன் தாவரவியல் பூங்காவைப்போல உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான இடத்தை தேர்வு செய்வதில் மாவட்ட வருவாய் அலுவலகம் முயற்சி எடுத்து வந்தது. அப்போது சென்னை- பெங்களூரு 6 வழிச்சாலையில் அகரம்சேரியில் சிறுகுன்றை சுற்றி உள்ள 20 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தை தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை இயக்குனர் சுப்பையன் பார்வையிட்டு, இந்த இடம் பூங்காவிற்கு ஏற்ற இடம் என கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் அகரம்சேரியில் உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், 20 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலைத் துறையின் அனைத்து வித பணிகளும் இங்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்படும். குறிப்பாக பசுமை குடில், நிழல்வலைக் குடில், விதைகன்றுகள் உற்பத்தி என ஒரு குட்டி பண்ணை இங்கு உருவாக்கப்படும். அது தவிர்த்து 2 கிலோமீட்டர் சுற்றளவில் நடைபாதை, படகு சவாரி, பெங்களூரு தாவரவியல் பூங்காவில் உள்ளது போல அனைத்து வசதிகளும் இங்கு செய்யபட உள்ளன. இதற்காக ரூ.65 கோடிக்கு மேல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அரசு தோட்டக்கலை மற்றும் பொழுது போக்கு பூங்கா பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

ஆய்வின்போது குடியாத்தம் தாசில்தார் வச்சலா, வருவாய் ஆய்வாளர் வாசுகி, அகரம்சேரி கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்