வேட்பாளரின் சின்னம் மாறியதற்கு எதிர்ப்பு: ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்; 2 பேர் தீக்குளிக்க முயற்சி

ஊத்தங்கரை அருகே வேட்பாளரின் சின்னம் மாறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. மேலும் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-27 22:45 GMT
ஊத்தங்கரை, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அந்த வகையில் ஊத்தங்கரை ஒன்றியம் பாவக்கல் நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லவன்பட்டி 21-வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக லலிதா மகாராஜன் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு கைப்பை சின்னம் ஒதுக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி மையத்தில் வெளியில் கைப்பை சின்னம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதே நேரத்தில் வாக்குச்சீட்டில் கைப்பைக்கு பதிலாக பெண்கள் பயன்படுத்த கூடிய ‘‘ஹேண்ட் பேக்’’ சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த வேட்பாளர் லலிதா மகாராஜன் அதிர்ச்சி அடைந்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டார்.

இதன் காரணமாக நல்லவன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் காலை 8 மணி அளவில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்னபூரணி, ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் உள்ளிட்டோர் வேட்பாளர் லலிதா மகாராஜனிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது வேட்பாளர் லலிதா மகாராஜன் தனக்கு துணிப்பை போன்ற கைப்பை சின்னம் வழங்கப்பட்டது. அதை காட்டி தான் ஓட்டுகேட்டதாகவும், தற்போது ஹேண்ட் பேக் போன்று சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தனக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்து, வழக்கு தொடர உள்ளதாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்று விட்டார். அதன்பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதற்கிடையே லலிதா மகாராஜனின் மைத்துனர்கள் அர்ஜூனன் (வயது33), ராஜேந்திரன் (29) ஆகியோர் நல்லவன்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து போராட்டம் நடத்த முயன்றனர்.

அவர்களை ஊத்தங்கரை போலீசார் பிடித்து விசாரணைக்காக சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக நல்லவன்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்