தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி வெங்கடதாரஅள்ளியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு
தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி வெங்கடதாரஅள்ளியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கடத்தூர்,
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள வெங்கடதாரஅள்ளி புதூர் ஊராட்சியில் சுமார் 1,190 வாக்குகள் உள்ளன. வெங்கடதாரஅள்ளி, புதூர் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக புதூரில் ஒரு வாக்குச்சாவடியும், வெங்கடதாரஅள்ளியில் ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் புதூர் கிராமத்தில் 800 வாக்குகளும், வெங்கடதாரஅள்ளி கிராமத்தில் 390 வாக்குகளும் உள்ளன.
கடந்த தேர்தல்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி புதூர் கிராமத்திற்கும், துணைத்தலைவர் பதவி வெங்கடதாரஅள்ளி கிராமத்திற்கும் என முடிவு செய்யப்பட்டு பதவி வகித்து வந்தனர். இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் புதூர், வெங்கடதாரஅள்ளி என 2 கிராமங்களிலும் தலைவர் பதவிக்கு 2 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். மேலும் வெங்கடதாரஅள்ளியை சேர்ந்த வேட்பாளர் புதூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற போது கிராமத்திற்குள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று காலை வெங்கடதாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வெங்கடதாரஅள்ளி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். அடிப்படை தேவைகளான குடிநீர், மின்விளக்கு, பஸ், சாலை வசதி ஆகியவை செய்து தர வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை 11 மணி வரை 8 வாக்குகள் மட்டுமே இந்த வாக்குச்சாவடியில் பதிவானது.
இதுகுறித்து வெங்கடதாரஅள்ளி பொதுமக்கள் கூறுகையில், புதூர் கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தினர் எங்கள் கிராமத்தை புறக்கணிப்பதால் தேர்தல் பிரசாரத்திற்கு கூட வேட்பாளர்களை அனுமதிக்கவில்லை. எங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர ஆர்வம் காட்டுவது இல்லை. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் வெங்கடதாரஅள்ளியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் இளஞ்செழியன், வருவாய் அலுவலர் எழில்மொழி, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிடவில்லை. இதனால் பிற்பகல் 3 மணி வரை 24 வாக்குகள் மட்டுமே இந்த வாக்குச்சாவடியில் பதிவானது.
தேர்தல் புறக்கணிப்பு குறித்து அதிகாரிகள் கூறுகையில், குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட ெவங்கடதாரஅள்ளியில் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சாத்தியப்படாது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.