களக்காடு அருகே பரபரப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தீவைத்த பெண் கைது பதிவேடு-கட்டில்கள் எரிந்து நாசம்

களக்காடு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தீவைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-27 22:30 GMT
களக்காடு, 

களக்காடு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தீவைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். தீ வைத்ததில் பதிவேடுகள், கட்டில்கள் எரிந்து நாசமாயின.

ஆரம்ப சுகாதார நிலையம்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் 5 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இது கடந்த 1990-ம் ஆண்டு கிராம மருந்தகமாக தொடங்கப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தினசரி 150-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த சுகாதார நிலையம் அருகில் அப்பகுதியை சேர்ந்த பாப்பா (வயது 60) என்பவர் டீக்கடை நடத்தி வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதார நிலையம் விரிவுபடுத்தும் பணிகள் நடந்தது. அப்போது பாப்பாவின் டீக்கடையை காலி செய்யும்படி சுகாதார துறையினர் தெரிவித்தனர். ஆனால், அவர் அது தனது நிலம் எனக்கூறி காலி செய்ய மறுத்தார். பிறகு களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

தீ வைப்பு

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், டீக்கடையை காலி செய்ய பாப்பாவுக்கு நிவாரணம் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாப்பா டீக்கடையை காலி செய்தார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாகிவும் தனக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை என பாப்பா புகார் கூறி வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை பாப்பா, சுகாதார நிலையத்துக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருந்தபோதும், அங்கிருந்த புறநோயாளிகள் பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பதிவேடு, ரத்த அழுத்தம் பார்க்கும் எந்திரம், 2 மேஜைகள், 4 கட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

பெண் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் கலையரசி, சிங்கிகுளம் மருத்துவ அதிகாரி (பொறுப்பு) கவிதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து களக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்