கனகபுராவில் இயேசு கிறிஸ்து சிலை: மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எனது கடமை டி.கே.சிவக்குமார் கருத்து

கனகபுராவில் இயேசு கிறிஸ்து சிலை அமைக்கும் விஷயத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எனது கடமை என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Update: 2019-12-27 22:45 GMT
பெங்களூரு, 

கனகபுராவில் இயேசு கிறிஸ்து சிலை அமைக்கும் விஷயத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எனது கடமை என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பா.ஜனதா விமர்சனம்

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள ஹாரோபெலே கபாலி மலையில் மிக உயரமான இயேசு கிறிஸ்து சிலை அமைக்கும் பணிக்கு முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் அடிக்கல் நாட்டினார். இந்த சிலை 114 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட இருக்கிறது. இதை பா.ஜனதா தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதற்கு டி.கே.சிவக்குமார் பதிலளிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது கனகபுரா தொகுதியில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். நான் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவன். அனைத்து மதத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் மதிக்கிறேன். இது எனது கடமை. அதனால் தான் இயேசு கிறிஸ்து சிலை அமைக்கிறேன். இயேசு சிலை அமைப்பது வரலாற்று சிறப்பு மிக்க பணி. நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து இந்த சிலையை நிறுவுகிறார்கள். இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை. அனந்தகுமார் ஹெக்டே இப்போது வேலையில்லாமல் இருப்பவர்.

பிரச்சினை வராது

அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை எரிக்க வேண்டும் என்று சொன்னவர் அவர். அவரிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இயேசு கிறிஸ்து சிலை அமைப்பது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டிருந்தோம்.

இதுபற்றி அந்த பகுதி மக்களுக்கு உறுதி அளித்திருந்தேன். இந்து கோவில் அமைக்கும் பணிகளுக்கும் உதவி செய்துள்ளேன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எனது கடமை. புறம்போக்கு நிலமாக இருந்தாலும் எந்த பிரச்சினையும் வராது. நமது ஜனநாயகத்தின் அடிப்படை சமத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்