திருச்சியில் தொடரும் சம்பவம்: மூதாட்டியிடம் 10 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு - மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சியில் சங்கிலி பறிப்பு சம்பவம் தொடருகிறது. மூதாட்டியிடம் 10 பவுன் தாலிச்சங்கிலி பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி காஜாமலை பகுதி டி.வி.எஸ்.நகரை சேர்ந்த தண்டபாணியின் மனைவி தனலட்சுமி (வயது 72). இவர் நேற்று முன்தினம் இரவு அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த மர்மநபர் ஒருவர், திடீரென தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கே.ேக.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக ரோட்டில் தனியாக செல்லும் பெண்களிடம் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்து விட்டு தப்பிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த வாரம் பாலக்கரை, தென்னூரில் 2 பெண்களிடம் 10 பவுன் சங்கிலி பறிபோனது. இதேபோல நேற்று முன்தினம் திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானம் அருகே நடந்து சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த பிரமிளாவின் (43) கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பறித்து விட்டு தப்பிச்சென்றார்.
பிரமிளாவின் கணவர் நாகலேஸ் ராமநாதபுரம் மாவட்டம் கேனிக்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கே.கே.நகர் பகுதியில் நடந்த 2 சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் திருச்சி மாநகரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர் ஒருவரை தனிப்படை போலீசார் நேற்று பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எத்தனை பேரிடம் சங்கிலி பறித்தார், அதனை எங்கு வைத்துள்ளார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். முழு விசாரணைக்கு பின் அவரை கைது செய்து, நகைகள் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். சங்கிலி பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.