கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு; 20 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறும் தண்ணீர்
ஆலங்குடியில், கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 20 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறிய தண்ணீர், அருகே உள்ள வீடுகளின் மீது விழுவதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
ஆலங்குடி,
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் மூலம் தண்ணீர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி மற்றும் நாகுடிக்கு கொண்டு வரப்படுகிறது. ஆலங்குடி அண்ணா நகர் பகுதி வழியாக அம்புலியாற்றின் குறுக்கே அந்த ராட்சத குழாய் சுமார் 40 அடி நீளத்திற்கு தொங்கிய நிலையில் செல்கிறது.
இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில் செல்லும் குழாயின் நடுப்பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், அதில் இருந்து பீறிட்டு வெளியேறும் தண்ணீர் சுமார் 20 அடி உயரம் வரை சென்று கீழே விழுகிறது. அவ்வாறு விழும் தண்ணீர் அருகில் ஒரு கட்டிடத்தில் உள்ள வீடுகள் மற்றும் குடிசை வீட்டின் மேல் விழுவதால், வீடுகளுக்குள் தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தெருவிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது குறித்து பேரூராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தண்ணீரை அடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறவில்லை. குடிநீர் கொண்டு செல்வதற்கான இரும்புக்குழாய்கள் பதிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனதால் துருப்பிடித்துள்ளது. இதனால் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே புதுக் குழாய்கள் பதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.