வாலாஜா அருகே, ஏரியில் கொட்டப்படும் குப்பைகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வாலாஜா அருகே ஏரியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-12-27 22:15 GMT
வாலாஜா, 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த படியம்பாக்கம் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி பொன்னை ஆற்று நீர்ப்பாசன பகுதி ஆகும். இந்த ஏரி நீரை நம்பி படியம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஏரியின் மதகு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், தோல் கழிவுகள், ரசாயன கழிவுகள் ஆகியவை உள்பட பல்வேறு வகையான கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. பல நேரங்களில் இவ்வாறு கொட்டப்படும் கழிவுகள் அங்கேயே தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

மேலும் இவ்வாறு ஏரியின் மதகு பகுயில் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுதால் ஏரியின் சுற்றுச்சூழல் மாசுபட்டு, நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது தவிர குப்பைகள் தேங்கி ஏரியின் மறுபுறம் செல்லும் கால்வாய்களிலும் அடைப்பு ஏற்பட்டு கால்வாய்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஏரியில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் வரும் கரும்புகையினால் படியம்பாக்கம், வரதராஜபுரம், செங்காடு, செங்காடு மோட்டூர், ஒழுகூர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

மேலும் ஏரி மதகு பகுதியில் கால்நடைகள் மேய்வதற்கும் ஏற்ற சூழ்நிலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரி மதகு பகுதிகளை ஒட்டி விவசாயமும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரி, ஏரிமதகு பகுதிகளில் பார்வையிட்டு குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்