உள்ளாட்சி தேர்தலில், ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயற்சி

உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதாக கலெக்டர் சி.கதிரவனிடம் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பரபரப்பு புகார் கொடுத்தனர்.

Update: 2019-12-26 22:45 GMT
ஈரோடு, 

தி.மு.க. ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆகிய கூட்டணி கட்சியினர் ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனு கொடுக்க நேற்று காலை சென்றனர்.

அங்கு அவர்கள் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் ஆகியோரை சந்தித்து ஆளும் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சிப்பதாக பரபரப்பு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளின் முறைகேடுகள் தொடங்கிவிட்டன. அவர்கள் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள வாக்குசாவடி முகவர்களை மிரட்டி வருகின்றனர்.

ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமான தேர்தல் அதிகாரிகளை பயன்படுத்தி கள்ள ஓட்டுகளைபோடுவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். நேர்மையான அதிகாரிகளும், போலீசாரும் மிரட்டப்படுகின்றனர். அவ்வப்போது எங்கள் கவனத்திற்கு வரும் முறைகேடுகளை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றாலும் அதனை கண்டுகொள்வதில்லை. எனவே தேர்தலில் முைறகேடு செய்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடைமுறைகள் மீறப்படுவதால் எதிர்கட்சியினரும், மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் இத்தகைய முறைகேடுகள் நடந்து உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டுறவு தேர்தலையும் முறையாக நடத்தாமல், வெற்றி பெற்றவர்களின் விவரம் நேரடியாக அறிவிக்கப்பட்டது.

எனவே, முறையாக தேர்தலை நடத்த பதற்றமான வாக்குசாவடிகளில் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்.

வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை மற்றும் செல்லாத வாக்குகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். பாதுகாப்பு அறையில் இருந்து எண்ணிக்கைக்காக வாக்குபெட்டிகள் எடுத்து வந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் பார்வையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் முழுமையாக பதிவு செய்யும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

மேலும் செய்திகள்