பண்ருட்டி அருகே, மளிகை கடையில் ரூ.2½ லட்சம் கொள்ளை - நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை
புதுப்பேட்டை அருகே மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுப்பேட்டை,
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூரை சேர்ந்தவர் நிஜாமுதீன் (வயது 34). இவர் அங்குள்ள மெயின் ரோட்டின் உள்புறம் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.2½ லட்சத்தை காணவில்லை. நள்ளிரவில் நிஜாமுதீன் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கடை ஷட்டரை உடைத்து அதில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ள சுரேஷ் என்பவரது நகை அடகு கடையிலும் பூட்டை உடைத்து, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் மளிகை கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.