விவசாய கடன் தள்ளுபடி குறித்த பேனரில் கூட்டணி கட்சி தலைவர்கள் படம் இல்லாததால் தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி
விவசாய கடன் தள்ளுபடி குறித்த பேனரில் கூட்டணி கட்சி தலைவர்கள் படம் இல்லாமல் உத்தவ் தாக்கரே படம் மட்டும் இடம்பெற்று இருப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. அதிருப்தி தெரிவித்து உள்ளார்.;
அவுரங்காபாத்,
விவசாய கடன் தள்ளுபடி குறித்த பேனரில் கூட்டணி கட்சி தலைவர்கள் படம் இல்லாமல் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே படம் மட்டும் இடம்பெற்று இருப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி
மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்தது.
மேலும் வரும் நாட்களில் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதி அளித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த திட்டம் குறித்து அவுரங்காபாத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சர்ச்சை வெடித்துள்ளது. அதில் மறைந்த சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரே மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோரின் படங்கள் மட்டுமே உள்ளன. கூட்டணி கட்சி தலைவர்கள் படங்கள் இல்லை.
இதற்கு அதிருப்தி தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. சதீஷ் சவான் கூறியதாவது:-
அதிருப்தி அளிக்கிறது
இந்த பேனர்களில் கூட்டணியில் உள்ள மற்ற மூத்த தலைவர்களின் படங்களையும் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பயிர்க்கடன் தள்ளுபடி என்பது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் சேர்ந்து எடுத்த முடிவாகும். இந்த பேனர்களை உள்ளூரை சேர்ந்த யாராவது வைத்து இருந்தால் தவறை புரிந்துகொள்ள முடியும். ஆனால் சிவசேனா கட்சி நிர்வாகிகளால் வைக்கப்பட்டு இருப்பதால் அது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேனர்களில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சிவசேனா மாவட்ட தலைவர் கூறுகையில், “இந்த பேனர்களை சில நிர்வாகிகள் உணர்ச்சிவசப்பட்டு வைத்து உள்ளனர். இனி இதுபோன்ற பேனர்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் படங்களுக்கு முக்கிய இடம் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றார்.