சதுரங்கவேட்டை பட பாணியில் மும்பையை சேர்ந்தவரிடம் ரூ.1½ கோடி மோசடி 3 பேர் கைது
சதுரங்கவேட்டை பட பாணியில் மும்பையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
சதுரங்கவேட்டை பட பாணியில் மும்பையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இரிடியம் மோசடி
4,471 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பத்திற்கு உட்படுத்தினால் மட்டுமே உருகும் தன்மை கொண்ட இரிடியம், பூமியில் கிடைக்கும் மிக அரிய உலோகங்களில் ஒன்று. உயர் தொழில் நுட்பங்களுக்கு மட்டுமே பயன்படும் இரிடியத்தை வைத்து மோசடி செய்வது கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.
தமிழில் வெளியான சதுரங்க வேட்டை படத்தில் அரிசியை ஈர்க்கும் தன்மை கொண்ட இரிடியம் என கூறி சாதாரண உலோகத்தை பணக்காரர் ஒருவரின் தலையில் கட்டிவிட்டு கோடிக்கணக்கில் பணமோசடி செய்யும் காட்சியை பார்த்திருப்போம்.
பணத்தை இழந்தவர்
இந்த பட பாணியில் சமீபத்தில் மும்பையை சேர்ந்த ஒருவரிடம் பணமோசடி நடந்துள்ளது. சம்பவத்தன்று மும்பையை சேர்ந்த அந்த நபரை யோகேந்திர ஹர்ஸ்ராஜ்(வயது58), சய்யத் பபுல் கபீர்(51) மற்றும் பிரங்னேஷ் ஜயந்த்பாய்(41) ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, அவர்கள் அதிக சக்திகள் நிறைந்த இரிடியத்திற்கு அரசிடம் அதிக தேவை உள்ளது. எனவே இரிடியத்தின் தரத்தை ஆய்வு செய்யும் எந்திரங்களில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த இரிடியத்தை கையாள்வதற்கு தங்கள் நிறுவனத்திற்கு சான்றிதழ் அளித்து உள்ளதாக கூறி போலி ஆவணங்களையும் காண்பித்தனர்.
இதை நம்பி அந்த நபர் ரூ.1 கோடியே 54 லட்சத்தை அவர்களிடம் முதலீடு செய்ததாக தெரிகிறது. ஆனால் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் மோசடியில் ஈடுபட்ட மேற்கண்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.