குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: ‘ஆணவத்துடன் செயல்படும் அரசு வீழ்ந்து போகும்’ பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு

ஆணவத்துடன் செயல்படும் அரசு வீழ்ந்து போகும் என்று பாரதீய ஜனதாவை சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.

Update: 2019-12-26 23:00 GMT
மும்பை, 

ஆணவத்துடன் செயல்படும் அரசு வீழ்ந்து போகும் என்று பாரதீய ஜனதாவை சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.

போராட்டங்கள்

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பெரும் வன்முறையும் ஏற்பட்டன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை திறந்துவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி கலவரத்தில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

டுவிட்டர் பதிவு

இந்தநிலையில் குடியுரிமை சட்டம் குறித்த விஷயத்தில் பாரதீய ஜனதாவின் செயல்பாட்டை தாக்கும் வகையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், அரசியலில் மத சாயம் பூசப்பட்டால் நாடு தவறானவர்களால் வழிநடத்தப்படுகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியதுடன், “புயலில் செலுத்தப்படுகிற படகும், ஆணவத்துடன் செயல்படும் ஆளுமையும் மூழ்கிவிடும்” என்று மறைந்த அமெரிக்க தலைவர் மார்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆணவத்துடன் செயல்பட்டால் மத்திய பாரதீய ஜனதா அரசு வீழ்ந்து போகும் என்பதை குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு தாக்கி உள்ளார்.

மேலும் செய்திகள்