மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட ஓட்டுப்பதிவு 893 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் கட்டமாக 893 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

Update: 2019-12-26 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய 8 ஒன்றியங்களில் 893 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 306 ஆண்கள், 2 லட்சத்து 33 ஆயிரத்து 48 பெண்கள், 16 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து 59 ஆயிரத்து 370 பேர் வாக்களிக்க உள்ளனர். இதன் மூலம் 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 86 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 164 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,320 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மொத்தம் 1,579 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 335 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எனவே மீதமுள்ள 1,244 இடங்களுக்கு 3,875 பேர் போட்டியிடுகின்றனர்.

இதையொட்டி 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்தும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் நேற்று 72 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகளும், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டுகளும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை மற்றும் நீலம் நிற வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்பட உள்ளன.

168 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

முதல்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள 893 வாக்குச்சாவடிகளில் 168 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. எனவே அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இவற்றில் 78 வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 48 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வீடியோவில் பதிவு செய்யவும், 42 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தலில் ஈடுபடும் போலீசார் நேற்று ஆயுதபடை வளாகத்திற்கு வருகை புரிந்தனர். இவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தக்க ஆலோசனைகளை வழங்கினார். இதற்கிடையே முதல்கட்ட தேர்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நேற்று 3-ம் கட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. அதன் பிறகு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்