குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தாதரில் வஞ்சித் பகுஜன் அகாடி ஆர்ப்பாட்டம் போக்குவரத்து பாதிப்பு

வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தாதரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-12-27 00:00 GMT
மும்பை, 

வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தாதரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தாதரில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி சார்பில் நேற்று மும்பை தாதர் டி.டி. சர்க்கிள் பகுதியில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில், “மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு காரணமாக முஸ்லிம்கள் தவிர நாடு முழுவதும் 40 சதவீத இந்துக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பழங்குடியினர் மற்றும் வஞ்சிக்கப்பட்ட சாதியினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்சினை அல்ல. ஆர்.எஸ்.எஸ். மற்றும் அரசியலமைப்பு இடையேயானது” என்றார்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தாதர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. திலக்நகர் மேம்பாலம் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து போலீசார் மும்பை நோக்கி வந்த கனரக வாகனங்களை சுன்னாப்பட்டி எவரெட் நகரில் தடுத்து நிறுத்தி அவுசஜா மேம்பாலம், வடலா ரோடு, பக்திபார்க், சிவ்ரி வழியாக திருப்பி விட்டனர்.

இதேபோல் மும்பையில் இருந்து தாதர் டி.டி. நோக்கி வந்த அனைத்து வாகனங்களும் நய்காவில் நிறுத்தப்பட்டு பைவ்கார்டன் ராம்மந்திர் நோக்கி திருப்பிவிடப்பட்டன.

மால்வானியில் பேரணி

இதேபோல் குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசிய பதிவு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றிற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று மும்பை மால்வானியில் பேரணி நடத்தினர். மால்வானியில் கேட் எண்-8 தொடங்கி டவுன்ஷிப் நகராட்சி பள்ளி வரை இந்த பேரணி நடைபெற்றது.

இந்த அணிவகுப்பில் உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள், பல்வேறு சமூகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஸ்லாம் சேக் இந்த பேரணியில் கலந்துகொண்டார்.

மேலும் செய்திகள்