தாவணகெரே அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன; 4 பேர் உடல்கருகி சாவு
தாவணகெரே அருகே, லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் 4 பேர் உடல்கருகி இறந்தனர்.
சிக்கமகளூரு,
தாவணகெரே அருகே, லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் 4 பேர் உடல்கருகி இறந்தனர்.
லாரிகள் மோதல்
தாவணகெரே மாவட்டம் ஜகலூர் புறநகர் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஹரியானா மாநில பதிவெண் கொண்ட ஒரு கியாஸ் டேங்கர் லாரி சென்று கொண்டு இருந்தது.
அப்போது எதிரே பெங்களூருவில் இருந்து டயர்களை ஏற்றி கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி சென்றது. இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக கியாஸ் டேங்கர் லாரியும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது திடீரென கியாஸ் டேங்கர் லாரியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென கன்டெய்னர் லாரியின் மீதும் பரவி எரிந்தது. இதனால் 2 லாரிகளும் கொழுந்துவிட்டு எரிந்தன.
4 பேர் கருகி சாவு
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜகலூர் புறநகர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரிகளில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் 2 லாரிகளிலும் பிடித்த தீ அணைக்கப்பட்டது. ஆனால் 2 லாரிகளில் இருந்த 4 பேரும் உடல்கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 லாரிகளும் எலும்புக்கூடாக காட்சி அளித்தன.
இறந்தவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர்களின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
சம்பவம் நடந்த இடம் பெங்களூருசோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து பாதிப்பை சீர்செய்தனர். இந்த விபத்து குறித்து ஜகலூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் விபத்தில் இறந்தவர்களின் பெயர், விவரங்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.