பெங்களூருவில் மால்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
பெங்களூருவில் மால்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
பெங்களூரு,
பெங்களூருவில் மால்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
தடம் புரண்ட ரெயில்
மைசூரு-பெங்களூரு இடையே தினமும் பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயங்கி வருகின்றன. இதில் மால்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்று. மைசூருவில் இருந்து பெங்களூரு எலகங்கா ரெயில் நிலையம் வரை இந்த ரெயில் இயங்குகிறது. அதன்படி நேற்று மால்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டிஎண்:16023) காலை 8.25 மணிக்கு மைசூரு ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது.
நேற்று காலை 11 மணியளவில் பெங்களூரு சிட்டி (கே.எஸ்.ஆர். பெங்களூரு) ரெயில் நிலையம் அருகே அந்த ரெயில் வந்துகொண்டிருந்தது. அப்போது சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் நாயண்டஹள்ளி அருகே எதிர்பாராத விதமாக மால்குடி ரெயில் என்ஜின் தடம் புரண்டது. இதன் காரணமாக என்ஜினை தொடர்ந்துள்ள சில பெட்டிகள் சரிந்து நின்றன. சாமர்த்தியமாக செயல்பட்டு என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
கூச்சலிட்டப்படி...
இதனால் பயந்துபோன பயணிகள் கூச்சலிட்டப்படி ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். உடனடியாக ரெயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்மேற்கு ரெயில்வே கோட்டத்தின் பெங்களூரு மண்டல மேலாளர் அசோக் குமார் வர்மா, தலைமை என்ஜினீயர் ஆர்.வி.என்.சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் தடம் புரண்ட ரெயிலை ஆய்வு செய்தனர்.
மேலும் விரைந்து செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் தடம் புரண்ட ரெயில் என்ஜினை மதியம் 12.36 மணிக்கு மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். அதன்பிறகு அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதன்பிறகு அது எலகங்காவுக்கு இயக்கப்படவில்லை. பின்னர் அது பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து மைசூருவுக்கு புறப்பட்டு சென்றது.
தாமதம்
மால்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த ரெயில் தடம் புரண்டதன் காரணமாக ஹெஜ்ஜலா பகுதியில் ரெயில்கள் நேற்று மெதுவாக இயக்கப்பட்டன. இதன் எதிரொலியாக நேற்று எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்-மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ்(12007), பாகல்கோட்டை-மைசூரு பசவா எக்ஸ்பிரஸ்(17308) ஆகியவை மைசூருவுக்கு தாமதமாக சென்றன.
மைசூரு-உதய்பூர் அரண்மனை ராணி உம்சாபர் எக்ஸ்பிரஸ்(19668), சாம்ராஜ்நகர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு பயணிகள் ரெயில்(56281), மைசூரு-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ்(12975) ஆகியவை நேற்று கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்துக்கு தாமதமாக வந்தன.