சூதாட்ட விடுதிகளை மக்கள் விரும்புகிறார்களா? - கவர்னர் கிரண்பெடி கேள்வி
புதுவையில் சூதாட்ட விடுதிகளை மக்கள் விரும்புகிறார்களா? என்று கவர்னர் கிரண்பெடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கேசினோக்களை (சூதாட்ட விடுதி) திறப்பது, சந்தைகளில் மதுபான கடைகளை திறப்பது மற்றும் லாட்டரி விற்பது போன்றவை புதுவை வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? இவை மக்கள் நலனுக்கானதா? அதை மக்கள் விரும்புகிறார்களா?
குறிப்பாக இவை ஏழைகளுக்கு உகந்ததா? என்பதை மக்களுக்கு முதல்-அமைச்சர் விளக்கவேண்டும். புதுவை மக்கள் இந்த நடைமுறைகளை விரும்பவில்லை.
கருத்து வேறுபாடு ஏற்படும் விஷயங்களை மத்திய அரசுக்கு அனுப்புவது சட்டவிரோதமா? அது ஜனநாயகத்துக்கு விரோதமானதா? ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட யூனியன் பிரதேச சட்டம் மற்றும் அலுவல் விதிகளில் இது உள்ளது.
நமது நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாடாளுமன்றத்தில் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அதில் கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே இருவிதமான கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டால் இறுதி முடிவுகளை மத்திய அரசு எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க இது எப்படி ஜனநாயக விரோதமானதாக இருக்கும்?
தற்போது சுற்றுலா மற்றும் வர்த்தகம் நடைபெறும் நேரத்தில் பந்த் தொடர்பான செய்திகள் அனைவரையும் புண்படுத்தும். புதுவைக்கு மக்கள் வருவதையும் ரத்து செய்வார்கள். அது புதுவையின் பொருளாதாரத்தை பாதிக்கும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.