திருமானூர் அருகே வேட்பாளர்கள் கொடுத்த பரிசு பொருட்களை மாரியம்மன் கோவிலில் வைத்து சென்ற வாக்காளர்

திருமானூர் அருகே வேட்பாளர்கள் கொடுத்த பரிசு பொருட்களை வாக்காளர் ஒருவர் மாரியம்மன் கோவிலில் வைத்து சென்றார். மேலும் சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-12-26 23:00 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32 பேரும் போட்டியிடுகின்றனர். திருமானூர் ஒன்றியத்திலேயே அதிகபட்சமாக 10 பேர் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவது இந்த கீழக்கவட்டாங்குறிச்சியில் தான். இதனால் தலைவர் பதவிக்கு நிற்கும் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் பல வேட்பாளர்கள் ஓட்டுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுத்து வந்தனர்.

பரிசு பொருட்கள்

இந்நிலையில் மேலக்கவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 48). தையல் தொழிலாளி. இவரின் குடும்பத்தில் உள்ள 6 ஓட்டுகளையும் பெற வேட்பாளர்கள் குத்து விளக்கு, லட்சுமி விளக்கு, தட்டு, சீப்பு என பல்வேறு பரிசு பொருட்களை ஓட்டுக்கு ஒன்று என பச்சமுத்து வீட்டில் இல்லாதபோது, அவரது குடும்பத்தி னரிடையே கொடுத்து சென்றுள்ளனர். பின் வீட்டிற்கு வந்த பச்சமுத்து பரிசு பொருட்களை பார்த்து மன குழப்பத்திற்கு உள்ளானார். இதனையடுத்து கொடுக்கப்பட்ட பரிசு பொருட்கள் அனைத்தையும், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்துவிட்டு மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றார்.

பரபரப்பு

இதுகுறித்து பச்சமுத்து கூறுகையில், இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். ஆனால், தங்களுக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி சிலர் பரிசு பொருட்களை அளித்து செல்கின்றனர். வேண்டாம் என்று கூறினாலும் திரும்ப பெற மறுக்கின்றனர்.

ஒருவருக்கு மட்டுமே என்னால் வாக்களிக்க முடியும். பரிசு பொருட்கள் கொடுத்த அனைவருக்கும் என்னால் எப்படி வாக்களிக்க முடியும். எனவே, இந்த பரிசு பொருட்களை கோவிலில் ஒப்படைத்தேன் என்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையை சீரமைத்து கொடுத்தால் போதும்

இதையடுத்து அங்கு கூடியிருந்த மேலக்கவட்டாங் குறிச்சி கிராம மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள தெற்கு தெரு கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் மிகவும் மோசமாக மாறி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து நாங்கள் கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரிசு பொருட்களை கொடுக்கின்றனர். இவ்வாறு பரிசு பொருட்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டு இந்த சாலையை சீரமைத்து கொடுத்தால் நாங்கள் அவர் களுக்கே ஓட்டு போடுவோம் என்றனர்.

மேலும் செய்திகள்