கொடைரோடு அருகே, நான்கு வழிச்சாலையோரத்தில் அனாதையாக நின்ற வேன்
கொடைரோடு அருகே, நான்கு வழிச்சாலையோரத்தில் அனாதையாக நிறுத்தப்பட்ட வேனால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைரோடு,
கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில், பள்ளபட்டி மாவூர் அணை பிரிவு என்ற இடத்தில் சாலையோரத்தில் நீண்டநேரமாக அனாதையாக ஒரு வேன் நின்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அந்த வேனை, போலீஸ் நிலையத்துக்கு போலீசார் எடுத்து சென்றனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா பணத்தன்பட்டியை சேர்ந்த அப்பாத்துரை மகன் பொன்ராஜ் (வயது 26) என்பவருக்கு அந்த வேன் சொந்தமானது என்று தெரியவந்தது. அவர் அந்த வேனை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்ராஜ் தனது வீட்டின் முன்பு வேனை நிறுத்தியிருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து உடுமலைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த வேனை, கொடைரோடு அருகே நான்குவழிச்சாலையோரத்தில் மர்ம நபர்கள் விட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடுமலைப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் இருந்து அந்த வேனை, உடுமலைப்பேட்டைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மடத்துக்குளம் பகுதியில் திருடப்பட்ட வேனை, கொடைரோடு அருகே மர்ம நபர்கள் நிறுத்தி சென்ற சம்பவம் கொடைரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.