கழுகுமலை தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தாளுனர் மீது தாக்குதல் - ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி கைது
கழுகுமலை தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தாளுனரை தாக்கிய ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கழுகுமலை,
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பழங்கோட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 64). இவர் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகன் பாலாஜிக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவரை கழுகுமலை-சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பாலாஜிக்கு உதவியாக, அவருடைய தாயார் மாரியம்மாளும் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தார்.
இதற்கிடையே மாரியம்மாளுக்கும் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவரையும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக, அந்த ஆஸ்பத்திரியின் தலைமையிடமான கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந்தேதி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை குடும்பத்தினர் பெற்று சென்று, இறுதிச்சடங்கு நடத்தி தகனம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் நடராஜன், கழுகுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு தனது மனைவிக்கு சரியான சிகிச்சை அளிக்காததால்தான் அவர் இறந்ததாக கூறி, அவதூறாக பேசி தகராறு செய்தார். அப்போது அவர், ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்தகத்தில் பணியில் இருந்த மருந்தாளுனரான கோவில்பட்டி அருகே கரிசல்குளத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ஏகாம்பர மூர்த்தியை (25) தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏகாம்பர மூர்த்தி அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடராஜனை கைது செய்தனர்.