திருத்துறைப்பூண்டி அருகே பரிதாபம்: கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து காவலாளி பலி

திருத்துறைப்பூண்டி அருகே கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து காவலாளி பரிதாபமாக பலியானார்.

Update: 2019-12-26 23:15 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 70). இவருக்கு அஞ்சம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இவரது வீட்டின் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி 15 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் உள்ளது. இந்த சுவர்கள் சேதமடைந்து காணப்பட்டன. இந்த சிவன் கோவிலில் இரவு நேர காவலாளியாக மாரியப்பன் பணியாற்றி வந்தார். தினமும் கோவிலில் மாலை நேரங்களில் மாரியப்பன் விளக்கு போடுவது வழக்கம்.

காவலாளி பலி

அதேபோல நேற்று வழக்கம்போல் விளக்கு போட்டு விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து மாரியப்பன் மேல் விழுந்தது. சுவற்றின் இடிபாடுகளில் சிக்கிய அவரை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் களால் மீட்க முடியவில்லை.

இதனால் அங்கு பொக்லின் எந்திரம் வரவழைக்கப்பட்டு பொக்லின் எந்திரம் மூலம் மாரியப்பனை மீட்டனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மோட்டார் ்சைக்கிளும், சைக்கிளும் சேதம் அடைந்தது.

மேலும் செய்திகள்