குடியுரிமை சட்டம் யாருடைய குடியுரிமைகளையும் பறிப்பதற்காக அல்ல -டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
குடியுரிமை சட்டம் யாருடைய குடியுரிமைகளையும் பறிப்பதற்காக அல்ல என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.;
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பா.ம.க. சார்பில் முப்படைகள் (அன்புமணி தம்பிகள், தங்கைகள், மக்கள் படை) சந்திப்பு கூட்டம் நேற்று காலை பனையபுரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார், மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், மாநில துணைத்தலைவர்கள் அன்புமணி, அரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் புகழேந்தி வரவேற்றார்.
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி தோல்வியை தழுவியபோது இருந்த மன வருத்தத்தை விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் இந்த தொகுதி பா.ம.க.வின் கோட்டை என நிரூபித்து விட்டீர்கள். இந்த தொகுதி அன்புமணி தொகுதியாக மாற வேண்டும் என்பது எனது ஆசையாகும்.
2021 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என எவ்வளவோ திட்டங்கள் என்னிடத்தில் உள்ளது. அதை நிறைவேற்ற உங்களால்தான் முடியும். அதை தெளிவுபடுத்துவதற்கு தான் இந்த சந்திப்பு கூட்டம்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஏற்கனவே கூறியபடி தொடக்கக்கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை இலவசமாக மாணவர்கள் படிக்கலாம். அதேபோன்று அனைத்துவித நோய்களும் இலவச சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,200 கோடி நிலுவை தொகை பாக்கியுள்ளது. இதையெல்லாம் மாற்றி அமைக்கின்ற திட்டங்கள் என்னிடம் உள்ளது.
கடந்த 50 ஆண்டுகாலமாக இரு கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தாலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. நாம் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு இங்குள்ள 223 ஆறுகளிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்டப்படும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டு விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற அனைத்து விளைபொருட்களுக்கும் அரசு அறிவித்துள்ள ஆதார விலையுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து தரப்படும். பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட முதல் கையெழுத்து போடப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை சட்டத்தில் துரோகம் செய்து விட்டதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். மாநிலத்தில் 22 ஆண்டுகளும், மத்தியில் 18 ஆண்டுகள் கூட்டணியில் இருந்து ஆட்சி செய்தபோது தி.மு.க. எதுவுமே செய்யவில்லை. இலங்கை தமிழர்கள் 6 லட்சம் பேருக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இங்கு குடியுரிமை பெற்றால் இலங்கை நாட்டின் குடியுரிமை சட்டம் 21-ன் படி இலங்கை நாட்டில் குடியுரிமை ரத்தாகும்.
இலங்கை தமிழர்கள் எந்த நாட்டில் குடியுரிமை பெற வேண்டும் என அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி எதுவும் தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார், அவர் தெரிந்து பேச வேண்டும்.
குடியுரிமை சட்டம் யாருடைய குடியுரிமைகளையும் பறிப்பதற்கான சட்டம் கிடையாது. இங்கு வசிப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகத்தான் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்தது தி.மு.க. தான். இங்கு வந்துள்ள நீங்கள், தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்றால் அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என உங்கள் ஊரில் உள்ளவர்களிடம் திட்டங்களை கூறி வாய்ப்புகளை கேட்டு பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் புண்ணியகோடி, செயலாளர் காமராஜ், தொகுதி செயலாளர் சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் சம்பத், கார்த்திகேயன், ஏழுமலை, மணிபாலன், ரவி, வடிவேல், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.