தனியார் நிறுவனத்தில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நிறுவனத்தில் உள்ள அறையில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2019-12-26 21:45 GMT
பூந்தமல்லி,

சென்னை பெரம்பூர் நட ராஜன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(வயது 39). இவர், அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து நேற்று காலை அலுவலகத்தை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள், அங்கிருந்த அறையில் மேலாளர் கோபிநாத், தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த ஜெ.ஜெ.நகர் போலீசார், தூக்கில் தொங்கிய கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கோபிநாத்துக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார். அவர், கடந்த 6 மாதங்களாக இந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கோபிநாத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அத்துடன் அவருக்கு கடன் பிரச்சினையும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த கோபிநாத்துக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கோபிநாத், அலுவலகத்துக்கு சென்று, தன்னிடம் இருந்த மற்றொரு சாவியால் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்று, அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எனினும் அவரது தற் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்