காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி

சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-12-26 23:00 GMT
திருவொற்றியூர்,

சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், சுனாமியில் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் படகில் சென்று கடலில் மலர்தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்டசெயலாளர் நா.பாலகங்கா, முன்னாள் மண்டலக்குழு தலைவர் பா.கார்த்திகேயன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

சுனாமி பேரழிவுக்கு பிறகு ஜெயலலிதா தீவிரமான நடவடிக்கை எடுத்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வை மேற்கொள்ள வழி செய்துள்ளார். தமிழக அரசுக்கு சுனாமி நீண்ட படிப்பினையை தந்துள்ளது. அதனால்தான் அதற்கு பின்பு ஏற்பட்ட புயல்களை எல்லாம் எங்களால் எளிதாக சமாளிக்க முடிந்தது.

மத்திய அரசில் நாங்கள் பங்கு வகிக்கவில்லை. ஆனால் கூட்டணியில் இருக்கிறோம். இசைவாக உள்ளோம். இதனால் தமிழக மீன்வளத்துறைக்கு ரூ.453 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவே நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக இருந்ததற்கு சிறப்பான உதாரணம்.

மத்திய அரசு மீன்வளத்துறை கட்டமைப்புக்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் இந்தியாவில் எந்த மாநிலமும் அதற்கான திட்டம் தயார் செய்து கொடுக்கவில்லை. தமிழகம் மட்டுமே அதற்கான திட்டத்தை தயார் செய்து கொடுத்துள்ளது. அதற்காக மீன்வளத்துறை கட்டமைப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மத்தியில் 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க.வினர் தமிழகத்துக்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால் நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதால் இதுபோன்று நடக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி மத்திய உள்துறை மந்திரி தெளிவாக விளக்கிய பின்பும், மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இலங்கை தமிழர்களுக்காக பேரணி நடத்தி போலியான நாடகத்தை நடத்துகிறார்கள்.

ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

ஆனால் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது அவரது ரூ.1,900 கோடியை சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் சுருட்டியதை இப்போது வருமான வரித்துறை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. இதை வருமான வரித்துறையினர் பார்த்துக்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்