தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் ரூ.1¼ லட்சத்தை சாலையில் வீசிவிட்டு ஓடிய கும்பல் - தேசூர் அருகே பரபரப்பு

தேசூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் ரூ.1¼ லட்சத்தை சாலையில் வீசி விட்டு சென்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-26 22:30 GMT
சேத்துப்பட்டு, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 30-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க ஊராட்சி ஒன்றியம் வாரியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேசூரை அடுத்த சிமபுதூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பறக்கும் படை அலுவலர் முகமதுகனி மற்றும் 3 போலீசார் கொண்ட குழுவினர் அந்த பகுதிக்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே ஒரு கும்பல் கையில் வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 300 ரூபாயை பறக்கும் படையினரை கண்டதும் சாலையில் வீசிவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை கைப்பற்றி தெள்ளார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் காந்திமதியிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்