குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு, பேரையூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - 300 பேர் மீது வழக்குபதிவு
பேரையூரில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பேரையூர்,
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, எழுமலை, உசிலம்பட்டி, அணைக்கரைப்பட்டி, எஸ்.கீழாப்பட்டி, மங்கள்ரேவ், விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி, மகாராஜபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள், தி.மு.க., காங்கிரஸ், பாப்புலர் பிரன்ட்ஸ் ஆப் இந்தியா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் பேரையூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், சட்ட திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரியும் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை பேரையூர், தும்மநாயக்கன்பட்டி முஸ்லிம் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
மேலும் பேரையூர் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 300 பேர் மீது பேரையூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.