தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை செயல்படவில்லை: அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் - மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை செயல்படாதநிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2019-12-25 22:45 GMT
சிவகாசி, 

காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான மாணிக்கம்தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜார்கண்ட் மாநில தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி, இந்திய பொருளாதாரத்தின் சரிவு, வேலையின்மை, பெண்களுக்கு பாதிப்பு இல்லை என்பது பற்றி மக்களிடம் எடுத்துக்கூறியது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. ஆனால் இவர்கள் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை சுட்டி காட்டி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு கேட்கிறோம். இது எங்களுக்கு முழு வெற்றியை தேடிதரும். நாங்கள் உள்ளாட்சியில் பதவிக்கு வந்தால் மக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்ப்போம். ஓட்டுக்கு ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை கொடுக்க அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்வந்துள்ளனர். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் கூட்டணி தர்மத்தை மீறாமல் இருக்கிறோம்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செயல்படாமல் இருக்கிறது. அதனால் தான் அ.தி.மு.க.வினர் பலஇடங்களில் தாராளமாக பணத்தை செலவு செய்து வருகிறார்கள். இதுவரைஅவர்கள் ஊழல் செய்து வைத்துள்ள பணம் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் செலவு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் பறக்கும்படையினர் எந்த ஆய்வும் இதுவரை செய்யவில்லை. அதிகாரிகள் அனைவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள். மாநில தேர்தல் ஆணையம் பறக்கும்படையை நியமித்து அதற்கு அதிகாரிகளை அறிவித்தது. ஆனால் அந்தஅதிகாரிகளை காணவில்லை. நாங்கள்மக்களை நம்பி இருக்கிறோம்.எங்கள்கூட்டணிக்கு வெற்றி உறுதி. அ.தி.மு.க.வினர் கொடுக்கும் பணத்தை மக்கள் தாராளமாக வாங்கி கொள்ளட்டும், ஆனால் மனசாட்சிப்படி தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் ராஜாசொக்கர், தளவாய்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்