நடைமேம்பாலம் கட்டும் பணி: ரெயில் சேவை ரத்தால் பயணிகள் கடும் அவதி

நடைமேம்பாலம் கட்டும் பணியையொட்டி கல்யாண்-டோம்பிவிலி இடையே ரெயில்சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2019-12-25 23:15 GMT
மும்பை, 

நடைமேம்பாலம் கட்டும் பணியையொட்டி கல்யாண்-டோம்பிவிலி இடையே ரெயில்சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ரெயில் சேவை ரத்து

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள தாக்குர்லி ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் கட்டும் பணியையொட்டி ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதனால் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை கல்யாண்-டோம்பிவிலி இடையே மின்சார ரெயில் சேவை இயக்கப்பட மாட்டாது என மத்திய ரெயில்வே தெரிவித்து இருந்தது.

அதன்படி, நேற்று பணிகள் நடந்ததால் குறிப்பிட்ட நேரத்தில் ரெயில்சேவை இயக்கப்படவில்லை. இதனால் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்து இருந்த பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

திவா ரெயில் நிலையத்தில் பெருமளவு பயணிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகள் புகார்

இதேபோல தானே, கோபர், மும்ரா, கல்வா போன்ற ரெயில் நிலையங்களில் பயணிகள் அதிகளவு குவிந்ததால் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இருப்பினும் இந்த ரெயில்களில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் காணப்பட்டதால் தானே ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே மேலாளரை சந்தித்தனர். அவர்கள் ரெயிலின் புறப்பாடு குறித்து முறையான அறிவிப்பு வெளியிட கோரி புகார் அளித்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ரெயில் சேவை ரத்து ஆனதால் பயணிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். ஒரு சில பயணிகள் தங்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் வீடு திரும்பி சென்றதை காண முடிந்தது.

இதையடுத்து 5 மணி நேரத்துக்கு பின்னர் மின்சார ரெயில்சேவை அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

மேலும் செய்திகள்