சிவசேனா பிரமுகரை துப்பாக்கியால் சுட்டதில் மேலும் 2 பேர் சிக்கினர் பிரபல தாதாவுக்கு தொடர்பு
சிவசேனா பிரமுகர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் சிக்கினர். பிரபல தாதாவுக்கு இந்த கொலை முயற்சியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மும்பை,
சிவசேனா பிரமுகர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் சிக்கினர். பிரபல தாதாவுக்கு இந்த கொலை முயற்சியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்டார்
மும்பை விக்ரோலி தாகுர்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஜாதவ் (வயது55). சிவசேனா கட்சியின் பிரமுகரான இவர் கடந்த 19-ந் தேதி அருகில் உள்ள சாய்நாத் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் சந்திரசேகரின் தோள்பட்டையில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் துப்பாக்கியால் சுட்டவர்களில் ஒருவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
விசாரணையில் பிடிபட்டவர் பெயர் சாகர் மிஸ்ரா(வயது 22) என்பது தெரியவந்தது. தர்ம அடி கொடுத்ததில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 2 பேர் சிக்கினர்
அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவத்தில் தொடர்புடைய தானே மற்றும் கர்நாடகாவில் பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் கிரிஷ்ணாதர் சிங் மற்றும் ஆனந்த் பத்தரே என்பது தெரியவந்தது. இதில் கிரிஷ்ணாதர் சிங் துப்பாக்கியால் சுட்டபோது தப்பி சென்றவர் ஆவார்.
இதுமட்டும் இன்றி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல தாதா பிரசாத் புஜாரிக்கு இந்த கொலை முயற்சியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே சிவசேனா பிரமுகர் துப்பாக்கியால் சுடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.