திருச்செங்கோட்டில் லாரி மீது கார் மோதல்: டயர் கடை உரிமையாளர் பரிதாப சாவு மனைவி, மகள்கள் காயம்

திருச்செங்கோட்டில் லாரி மீது கார் மோதியதில் டயர் கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடைய மனைவி, மகள்கள் காயமடைந்தனர்.

Update: 2019-12-25 23:00 GMT
எலச்சிபாளையம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆடையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவர் ஜலகண்டாபுரம் பகுதியில் டயர் கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி ரேவதி (39). இவர்களுடைய மகள்கள் திவ்யா, நித்யா.

அமாவாசை தினம் என்பதால் இவர்கள் ஒரு காரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். நேற்று மாலை அவர்கள் காரில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள பரமத்திவேலூர் சாலையில் வந்து கொண்டு இருந்தனர். காரை ராஜேந்திரன் ஓட்டினர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரேவதி, திவ்யா, நித்யா ஆகியோர் காயமடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே லாரியில் வேகமாக மோதிய கார் அந்த வழியாக வந்த மற்றொரு கார் மீது மோதியது. அப்போது உடனடியாக அந்த காரின் முன்பகுதியில் 2 ஏர்பேக்குகள் விரிந்தது. இதனால் காரை ஓட்டி வந்த திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை அடுத்த அய்யக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (46), அவருடைய மனைவி கவுரி (41), மகன் நவீன் குமார் (19) ஆகியோர் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்கள் படை வெட்டி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கார் மோதியதில் நிலை தடுமாறிய லாரி சாலையின் மறுபக்கம் சென்று நின்றது. எதிரில் ஏதும் வாகனங்கள் வராததால் விபத்து நடக்க வில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி, மகள்கள் கண்முன்னே டயர் கடை உரிமையாளர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்