உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-12-25 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் மேச்சேரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கும் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கும் தேவையான பொருட்கள் தயார்படுத்துதல், வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தாரமங்கலம் மற்றும் நங்கவள்ளி, கொளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் சீட்டு வழங்கும் பணிகள், வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள் ஆகியவற்றையும் கலெக்டர் ராமன் பார்வையிட்டார். பின்னர் அவர், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

வாக்கு எண்ணிக்கை

இது குறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களும் தயாராக உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளவாறு வாக்குப்பதிவிற்கு தேவையான 72 பொருட்களையும் உரிய அலுவலர்கள் முறையாக பிரித்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்கு அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர்களிடம் வழங்கும் பணிகளையும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களை திரும்பபெற்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் எடுத்து வந்து வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்படைக்கும் பணிகளையும் மண்டல அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு அறைகள்

ஊரக உள்ளாட்சிக்கான சாதாரண தேர்தலுக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடுத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் இத்தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு பெட்டி வைப்பதற்கு தேவையான பாதுகாப்பு அறைகளை முழுமையாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையினையும் தனித்தனியாக அமைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், ஓமலூர் தாசில்தார் குமரன், மேட்டூர் தாசில்தார் ஹசீன்பானு உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்