குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடுமுழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் சுமை தாங்கி அருகே நேற்று மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முகமது இர்பான் தலைமை தாங்கினார். ஆல் இந்திய இமாம்ஸ் கவுன்சில் மாநில பொது செயலாளர் ஆபிருத்தீன் மன்பயீ, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான், த.மு.மு.க. நகர தலைவர் சாதிக் அலி, மக்கள் ஜனநாயக கட்சி பிரமுகர் ஹஜ்ஜி முகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சலாவுதீன், சுஜாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், அதை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பொது செயலாளர் அஷ்ரப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அம்பேத்கர், நாம் தமிழர் கட்சி அசாருதீன், மக்கள் ஜனநாயக கட்சி சலீம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மணிவாசகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட துணை செயலாளர் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாணவர், இளைஞர் கூட்டமைப்பு பிரமுகர் அரபாஸ் நன்றி கூறினார். முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் பாலகிருஷ்ணன், மங்கலம்பேட்டை ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.