பருத்திப்பட்டு ஏரியில் படகு சவாரி தொடங்கியது - அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் நேற்று முதல் படகு சவாரி தொடங்கியது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று, படகு சவாரியை தொடங்கிவைத்தார்.
ஆவடி,
ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரி 87.06 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அதில் 3.5 கி.மீ. தூரத்துக்கு சுற்றுச்சுவர், அதைஓட்டி நடைபாதை, ஏரியின் நடுவே ரூ.44.81 லட்சத்தில் இரண்டு செயற்கை தீவுகள் என மொத்தம் ரூ.28.16 கோடியில் பசுமை பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில் ஏரியின் 53.28 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியில் படகு சவாரி செய்ய ரூ.46.45 லட்சத்தில் படகுகுழாம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பசுமை பூங்கா திறக்கப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை முதல் படகு சவாரி தொடங்கியது.
அமைச்சர் க.பாண்டியராஜன், படகு சவாரியை தொடங்கி வைத்து, முதல் சவாரி சென்றார். அவருடன் ஆவடி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பொதுமக்கள் படகு சவாரி செய்வதற்காக ரூ.52 லட்சத்தில் 20 மிதி படகுகள் கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 12 மிதி படகுகள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. விழாக்கால சலுகையாக இன்று(வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக படகு சவாரி செய்யலாம் என படகு சவாரிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அதன்பிறகு படகு சவாரி செய்ய பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறியவர்களுக்கு ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். தினமும் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணிவரை படகு சவாரி நடைபெறும் எனவும் அந்த தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.