17 வயது சிறுமியை திருமணம் செய்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் கைது

17 வயது சிறுமியை திருமணம் செய்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த பெற்றோரும் சிக்கினர்.

Update: 2019-12-25 22:15 GMT
கரூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்தவர் ஜெயலெட்சுமணன் (வயது 37). இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கரூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதையடுத்து ஜெயலெட்சுமணன் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் நடந்ததாக கரூர் மாவட்ட சைல்டு-லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது.இந்த தகவல் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா தலைமையிலான போலீசார் கரூர் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்கு கட்டாய திருமணம் நடந்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து சிறுமி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறுமியை கட்டாய திருமணம் செய்த ஜெயலெட்சுமணன் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை பழனிவேல் (45), தாய் லதா (43), உறவினர் வசந்தா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ஜெயலெட்சுமணனின் தாய் நல்லம்மாளை (60) தேடி வருகின்றனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்