வந்தவாசியில் மாயமான சிறுவன் அகழியில் பிணமாக மீட்பு

வந்தவாசியில் மாயமான சிறுவன் அகழியில் பிணமாக மீட்கப்பட்டான்.

Update: 2019-12-25 22:45 GMT
வந்தவாசி,

வந்தவாசி கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 30). அவருடைய மனைவி பாத்திமா (27). இவர்களுக்கு பாஹிதாநி‌ஷா (9), சாஹிதாநி‌ஷா (6) என 2 மகள்களும், முகமது ரியான் (2) என்ற மகனும் உள்ளனர். இதில் பாஹிதாநி‌ஷா சென்னையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறாள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முகமது ரியான் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாயமான முகமது ரியான் நேற்று காலை வீட்டின் பின்புறம் கோட்டை அகழியில் உள்ள தண்ணீரில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை மீட்டனர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்