ஊத்துக்கோட்டை அருகே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் மேம்பாலம்
ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தின் தூண்கள் சேதம் அடையும் அபாயம் உள்ளது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரிநீரை மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரைப்பாக்கம், அணைக்கட்டு வழியாக பாயந்து வங்க கடலில் கலக்கிறது.
இப்படி தண்ணீர் திறக்கும் போது பூண்டி அருகே ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் மூழ்கி ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து ரத்து செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 40 ஆண்டுகளுக்கு முன்னர் தரைப்பாலத்தின் மீது 10 அடி உயரத்தில் மேம்பாலம் அமைத்தது.
இந்த பாலத்தின் வழியாகத்தான் தற்போது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனிடையே இரண்டு வாரத்துக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழைக்கு கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒதப்பை பாலம் வழியாக தண்ணீர் பாய்ந்து சென்றது. இதனால் பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள கான்கிரீட் தரை வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பகுதிக்கு மிக அருகே பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் உள்ளன. இதனை உடனடியாக சீரமைக்காவிட்டால் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த பாலப்பகுதியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.