பணமதிப்பிழப்பு குறித்து தெரியாமல், 31 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த மூதாட்டி - மாற்றித்தர அரசுக்கு கோரிக்கை
கோவையை சோ்ந்த மூதாட்டி ஒருவா் 31 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து உள்ளார். அவற்றை மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை,
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பா் மாதம் 8-ந் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது.
ஆனாலும் கிராமப்புறங்களில் இருக்கும் ஒரு சில முதியவர்களுக்கு தெரியவில்லை. கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் பூமலூர் கிராமத்தை சேர்ந்த ரங்கம்மாள், தங்கம்மாள் என்ற சகோதரிகள் 46 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்து இருந்தனர். மருத்துவ செலவுக்காக கொண்டு சென்றபோது தான் அது செல்லாது என்பதே அவர்களுக்கு தெரியவந்தது. அதில் உடல்நலக்குறைவால் ரங்கம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதுபோன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தெரியாமல் கோவையிலும் மூதாட்டி ஒருவர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்த சம்பவம் நடந்து உள்ளது.
அது குறித்த விவரம் வருமாறு:-
கோவையை அடுத்த சரவணம்பட்டி கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவா் கமலம்மாள் (வயது 92). இவருடைய கணவர் ராஜ்வாலா. மில் தொழிலாளி. இவர்களுக்கு பிரேமா (68), ஜெயந்தி (65) ஆகிய மகள்களும், கோபால் (64) என்ற மகனும் உள்ளனர். இதில் ராஜ்வாலா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கமலம்மாள் தனது மகன் கோபால் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கமலம்மாள் சிறுக சிறுக ரூ.31 ஆயிரத்து 500 சேமித்துவைத்து உள்ளார். ஆனால் அந்த பணம் அனைத்தும் மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் ஆகும்.
இதுகுறித்து கமலம்மாளின் மகன் கோபால் கூறியதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நேரத்தில் நாங்கள் வெளியூரில் இருந்தோம். பின்னர் வீட்டுக்கு வந்ததும் எனது அம்மாவிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது குறித்து தெரிவித்தோம். ஆனால் அவர் என்னிடம் அதுபோன்று பணம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம். எனது தாயாரின் உடைகள் வைப்பதற்கு என்று தனியாக ஒரு பீரோ உள்ளது. அந்த பீரோவை எனது வீட்டில் உள்ளவர்கள் யாரும் பயன்படுத்தமாட்டார்கள். கோவை கணபதி கோபால்சாமி கோவில் அருகே வசித்து வந்த நாங்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கொண்டையம்பாளையம் பகுதிக்கு மாறுதலாகி வந்தோம். வீடு மாற்றம் செய்யும் போது தாயாரின் பீரோவை எனது மகள் சுத்தம் செய்தாள். அப்போது துணிக்குள் இருந்து ரூபாய் நோட்டுகள் சிதறி விழுந்தன. அதை பார்த்தபோது செல்லாத 500 ரூபாய் 51-ம், 1000 ரூபாய் நோட்டுகள் 6-ம் என மொத்தம் 31 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பழங்காலத்து ஒரு ரூபாய், 2 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இதையடுத்து நான் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு பல்வேறு வங்கிகளுக்கு சென்று மாற்ற முயன்றேன். ஆனால் அதற்கு அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று கூறிவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி மூதாட்டி கமலம்மாள் கூறுகையில், மில்லில் கூலித்தொழில் செய்தபோது சிறுக சிறுக சேமித்த பணமாகும். எனக்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே இந்த ரூபாய் நோட்டுகளை அரசு மாற்றித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் எனது மருத்துவ செலவுக்கு அந்த தொகை பயன்படும். அரசு செய்து தருமா? என ஏக்கத்துடன் கூறினார்.