பத்ராவதி அருகே விபத்து மரத்தில் மோதிய தனியார் பஸ்; உடற்கல்வி ஆசிரியர் பலி கல்வி சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்

பத்ராவதி அருகே கல்வி சுற்றுலாவுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது தனியார் பஸ் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2019-12-25 17:35 GMT
சிவமொக்கா, 

பத்ராவதி அருகே கல்வி சுற்றுலாவுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது தனியார் பஸ் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் பரிதாபமாக பலியானார்.

தனியார் பஸ்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா மாரசெட்டிஹள்ளி கிராமத்தில் மஞ்சுநாதா உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த 30 மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த ஹரிகிருஷ்ணா தனியார் பஸ் மூலம் அழைத்துச் சென்றார். சுற்றுலா முடிந்து நேற்று அதிகாலையில் அவர்கள் பத்ராவதிக்கு திரும்பினர். மாணவ-மாணவிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விட்டுவிட்டு உடற்கல்வி ஆசிரியர் மட்டும் அந்த பஸ்சில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.

உடற்கல்வி ஆசிரியர் பலி

அவர்கள் பத்ராவதி தாலுகா அரபிலசி கிராமம் அருகே கல்லிஹால் சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் மரம் பாதியளவு முறிந்து பஸ் மீது விழுந்தது. இதில் பஸ் பலத்த சேதம் அடைந்தது. பஸ்சில் பயணித்து வந்த உடற்கல்வி ஆசிரியர் ஹரிகிருஷ்ணா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து நடந்ததும் டிரைவரும், கிளீனரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த விபத்து குறித்து ஹொலெஹொன்னூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்