மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் ‘லிப்ட்’ கேட்ட வெளிநாட்டு பெண் கடத்தி கற்பழிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் ‘லிப்ட்’ கேட்ட வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழித்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
புனே,
மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் ‘லிப்ட்’ கேட்ட வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழித்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
புனே வந்த பெண்
உகாண்டா நாட்டை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், சம்பவத்தன்று புனேயில் வசிக்கும் தனது சகோதரி வீட்டிற்கு செல்ல சுற்றுலா விசாவில் புனே சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் அவர், முண்ட்வா பகுதியில் உள்ள ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டார். இரவு 12 மணி ஆனநிலையில் சகோதரி வீட்டிற்கு செல்ல வாடகை கார் கிடைக்கவில்லை.
இதனால் அப்பெண் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து ‘லிப்ட்’ கேட்டு உள்ளார். இந்தநிலையில் அந்த வாலிபர் வெளிநாட்டு பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மறைவான இடத்துக்கு கடத்திச்சென்றார்.
கற்பழிப்பு
பின்னர் அங்கு வந்த தனது நண்பருடன் சேர்ந்து வெளிநாட்டு பெண்ணை மிரட்டி கற்பழித்து உள்ளார். இதன்பின் அந்த பெண்ணை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு விட்டு அங்கு இருந்து 2 பேரும் தப்பிச்சென்றனர்.
நடுரோட்டில் நின்ற வெளிநாட்டு பெண்ணை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற பின் தனக்கு நடந்த அவலத்தை கூறி போலீசில் அந்த பெண் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழித்த 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.