மக்களை அலட்சியப்படுத்தியதால் ஜார்கண்டில் பா.ஜனதா தோல்வி சிவசேனா கருத்து

மக்களை அலட்சியப்படுத்தியதால் தான் ஜார்கண்டில் பா.ஜனதா தோல்வியை தழுவியதாக சிவசேனா கூறியுள்ளது.

Update: 2019-12-24 22:40 GMT
மும்பை,

மக்களை அலட்சியப்படுத்தியதால் தான் ஜார்கண்டில் பா.ஜனதா தோல்வியை தழுவியதாக சிவசேனா கூறியுள்ளது.

தோல்விக்கான காரணம்

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. பா.ஜனதா தோல்வியை தழுவியது.

பா.ஜனதாவின் இந்த தோல்வி குறித்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் மக்களை அலட்சியப்படுத்தியதால் தான் பா.ஜனதா தோல்வியை தழுவியதாக கருத்து தெரிவித்து உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியானாவில் நடந்த தேர்தலில் கூட காங்கிரஸ் எழுச்சி பெற்றது. ஆனால் பா.ஜனதா தேர்தலில் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சியுடன் சோ்ந்து ஆட்சியை பிடித்தது. மக்கள் ஆட்சியை மாற்ற வேண்டும் என நினைத்துவிட்டால் அவர்கள் பணத்திற்கும், அதிகார அழுத்தத்திற்கும் ஏமாற மாட்டார்கள்.

குடியுரிமை சட்டம்

தேர்தல் முடிவுகள் மூலம் சுயபரிசோதனை செய்து கொள்ளும் மனநிலையில் பா.ஜனதா இல்லை. நீங்கள் மக்களை அலட்சியப்படுத்தும் போது, இதைவிட வேறு என்ன நடக்க முடியும்.

குடியுரிமை சட்டம் மூலம் இந்துகளின் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என அமித்ஷா நினைத்தார். ஆனால் ஜார்கண்ட் தொழிலாளர்களும், பழங்குடியினரும் பா.ஜனதாவை புறக்கணித்து உள்ளனர். 2018-ம் ஆண்டு நாட்டில் 75 சதவீத மாநிலங்கள் பா.ஜனதா வசம் இருந்தன. தற்போது 30 முதல் 35 சதவீத மாநிலங்கள் மட்டுமே பா.ஜனதாவிடம் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்