பான்மசாலா பொருட்கள் கடத்தல்: அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேர் கைது
வேலூர் அருகே பான்மசாலா பொருட்கள் கடத்தல் தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
வேலூர்,
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பள்ளிகொண்டாவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை மடக்கி சோதனை செய்ததில், அதில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் இருந்தது தெரிந்தது.
டிரைவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் பெங்களூருவில் இருந்து பான்மசாலா பொருட்களை கடத்தி வருவதாகவும், அப்துல்லாபுரத்தில் இருந்து தெள்ளூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு குடோனுக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.
அந்த குடோன் விரிஞ்சிபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளதால் பள்ளிகொண்டா போலீசார், விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குடோனுக்கு விரிஞ்சிபுரம் போலீசார் சென்றனர். அங்கு ஏற்கனவே 2 சரக்கு ஆட்டோக்களில் பான்மசாலா பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த 2 சரக்கு ஆட்டோவையும் அதில் இருந்த பான்மசாலா பொருட்களையும், குடோனில் இருந்த பான்மசாலா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அந்த குடோன் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சக்திவேல் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனிடையே அங்கு வந்த பள்ளிகொண்டா போலீசார் ஒரு மினிலாரியையும், டிரைவரையும் விரிஞ்சிபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பான்மசாலா பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சக்திவேல் (வயது 42), தர்மபுரி மாவட்டம் கொளத்தூரை சேர்ந்த அர்ஜூனர் (37), கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த பூவரசன் (22), அணைக்கட்டு தாலுகா நாராயணபுரத்தை சேர்ந்த வினோத்குமார் (30), வேலூர் பெரிய சித்தேரியை சேர்ந்த பிரசாந்த் (23), அரசமரப்பேட்டையை சேர்ந்த பிரதீப் (20), ஜித்தேத்திரகுமார் (33), சின்னாராம் (22) ஆகியோரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களின் மதிப்பு ரூ.17 லட்சம் இருக்கும். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.