ஏரல் அருகே பெயிண்டர் கொலையில் மேலும் 2 பேர் கைது

ஏரல் அருகே பெயிண்டர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-24 21:30 GMT
ஏரல், 

ஏரல் அருகே பெயிண்டர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெயிண்டர் கொலை

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 43). பெயிண்டர். இவர் தொழில் வி‌‌ஷயமாக சிலரிடம் கடன் வாங்கியதாகவும், பின்னர் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சாகுல் ஹமீதுக்கு கடன் வழங்கியவர்கள், அவரிடம் கடனை திருப்பி தருமாறு கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலையில் வீட்டில் இருந்த சாகுல் ஹமீதுவை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. பின்னர் அவரை காரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கி விட்டு, மாலையில் வீட்டில் இறக்கி விட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சாகுல் ஹமீதுவை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 19-ந்தேதி இரவில் சாகுல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த முத்துபாண்டி (28), ஏரல் அருகே திருவழுதிநாடார்விளையைச் சேர்ந்த சோமசுந்தரம் (46) ஆகிய 2 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

இந்த நிலையில் சாகுல் ஹமீது கொலைவழக்கு தொடர்பாக, நாசரேத் வாழையடியைச் சேர்ந்த ஜோதிராஜன் மகன் ஜான் பென்சன் (26), ஸ்ரீவைகுண்டம் அருகே வரதராஜபுரத்தை அடுத்த கட்டையம்புதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஆறுமுகநயினார் (28) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்