திண்டிவனம் பஸ் நிலையத்தில், விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை
திண்டிவனம் பஸ் நிலையத்தில் விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே உள்ள தாராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் சிவனேசன்(வயது 21). மெக்கானிக்கான இவர், சென்னையில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஊருக்கு வந்த சிவனேசன் தனது பெற்றோரிடம், சென்னையில் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். அதற்கு பெற்றோர், உனது அக்காள் திருமணம் முடிந்த பிறகு நீ காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்துகொள் என்று கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சிவனேசன், யாரிடமும் பேசவில்லை. திண்டிவனம் இந்திராகாந்தி பஸ் நிலையத்தில் விஷம் குடித்த நிலையில் அவர் மயங்கி கிடந்தார். இதை பார்த்த பயணிகள், திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, சிவனேசனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சிவனேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவனேசனின் தந்தை பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.