குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு, முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - செஞ்சி, திண்டிவனத்தில் நடந்தது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செஞ்சி, திண்டிவனத்தில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-24 22:00 GMT
செஞ்சி,

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் செஞ்சியிலும் 24-ந் தேதி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முஸ்லிம் அமைப்புகள் அறிவித்தது. ஆனால் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முஸ்லிம் அமைப்புகள் அறிவித்தன.

அதன்படி செஞ்சியில் நேற்று பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நேற்று காலை செஞ்சி சத்திர தெருவில் உள்ள பள்ளி வாசலில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது அவர்கள், 100 மீட்டர் நீளத்திற்கு தேசிய கொடியை எடுத்துச்சென்றனர். இந்த பேரணி காந்தி பஜார் வழியாக சென்று செட்டிப்பாளையம் குளக்கரையில் முடிவடைந்தது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு செஞ்சி வட்ட ஜமாத் ஒருங்கிணைப்புகுழு தலைவர் சையத் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ‌ஷாஜகான், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது, ம.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் யாக்கூப், மாநில பொருளாளர் ஹாரூன்ர‌ஷித், ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ.ராமமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் ரங்கபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், திராவிடர் கழக மண்டல தலைவர் தாஸ். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர் காஜா நஜீர், செஞ்சி வட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, செஞ்சி வட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள், இயக்கங்கள், தோழமை கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜமாத் உலமா சபை தலைவர் அகமத்சித்திக் பாகவி நன்றி கூறினார். இதனை தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட 1500 பேர் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் திண்டிவனம் வ.உ.சி. திடலிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டிவனம் வட்டார ஜமாத் உலமா சபை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அபிபுல்லாஹ் தலைமை தாங்கினார். இமாம்கள் அபிபுல்லா ஜாவித் அபுபக்கர், சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் புதுப்பள்ளிவாசல் இமாம் ஷேக் தாவூத் வரவேற்றார். அனைத்திந்திய இமாம் கவுன்சில் மாநில செயலாளர் ஹாபிருதின், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் நாகூர்மீரான், நவாப் பள்ளிவாசல் தலைவர் வக்கீல் அஜ்மல் அலி, த.மு.மு.க. பிரசார பேரவை கோவை ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். எஸ்.டி.பி.ஐ. ஹசன், த.மு.மு.க. அலாவுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் மற்றும் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி திண்டிவனத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்