விளாத்திகுளம் அருகே தொழிலாளியிடம் ரூ.33 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
விளாத்திகுளம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் தொழிலாளி வைத்திருந்த ரூ.33 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் தொழிலாளி வைத்திருந்த ரூ.33 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாக்காளர்களுக்கு பணம் வினியோகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடை செய்யும் வகையில், 18 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் விளாத்திகுளத்தை அடுத்த ஆற்றங்கரை பஞ்சாயத்தில் நேற்று காலையில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதாக, தேர்தல் பறக்கும் படை குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.33 ஆயிரம் பறிமுதல்
உடனே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கருப்பசாமி தலைமையிலான குழுவினர், ஆற்றங்கரை கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற அப்பகுதியைச் சேர்ந்த தமிழ் அமுதனிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.33 ஆயிரத்து 100 வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விளாத்திகுளம் உதவி கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தமிழ் அமுதனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.