தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 9 பவுன் நகை அபேஸ் குடுகுடுப்பைக்காரர் கைது

குளச்சல் அருகே தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 9 பவுன் நகையை அபேஸ் செய்து சென்ற குடுகுடுப்பைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-24 23:00 GMT
குளச்சல்,

குளச்சல் அருகே இரும்பிலியை சேர்ந்தவர் பெனிராஜன், கொத்தனார். இவர் வீட்டின் அருகில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, முத்துராமலிங்க நகரை சேர்ந்த முத்துமணி (வயது 34) என்பவர் வசித்து வந்தார்.

குடுகுடுப்பைக்காரரான இவர், பெனிராஜன் மனைவி செபியா மேரியிடம,் உனக்கு தாலி தோஷம் உள்ளது. அந்த தோஷத்தை கழிப்பதற்கு தாலி மற்றும் தங்க நகைகளை வைத்து பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறினார். இதை உண்மை என்று நம்பிய செபியா மேரி தன் தாலி உள்பட 9 பவுன் தங்க நகைகளை பூஜைக்கு கொடுத்தார்.

9 பவுன் நகை அபேஸ்

அந்த நகைகளை மண் கலசத்தில் வைத்த முத்துமணி, பூஜை முடிந்ததும் மண் கலசத்தை கொடுத்தார். அதை மறுநாள் காலையில் குளித்து விட்டு தான் திறக்க வேண்டும் என கூறினார்.

அதன்படி மறுநாள் காலை குளித்துவிட்டு செபியா மேரி கலசத்தை திறந்த போது, அதில் கற்கள் இருந்தது. தான் பூஜைக்கு கொடுத்த 9 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். உடனே முத்துமணியை தேடி சென்ற போது, வீட்டை இரவோடு இரவாக காலி செய்து சென்றது தெரிய வந்தது.

கைது

இதுபற்றி செபியாமேரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமணியை தேடி வந்தனர்.

அப்போது குடுகுடுப்பைக்காரா் குறித்து துப்பு துலங்கியது. குளச்சல் அருகே வெட்டுமடையில் முத்துமணியை கைது செய்து, அவரிடமிருந்து 9 பவுன் நகையும் மீட்கப்பட்டது. இதே போல் வேறு சம்பவங்களில் முத்துமணி ஈடுபட்டு உள்ளாரா? என்று போலீசார்் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்