நடுரோட்டில் பாம்பு படமெடுத்து ஆடியதால் டிரைவர் அதிர்ச்சி: அ.தி.மு.க. வேட்பாளர் கார் வயலுக்குள் பாய்ந்தது
நடுரோட்டில் பாம்பு படமெடுத்து ஆடியதை கண்டு டிரைவர் அதிர்ச்சி அடைந்ததால் அ.தி.மு.க. வேட்பாளரின் கார் வயலுக்குள் பாய்ந்தது.;
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் உள்ளாட்சி தேர்தலில் ராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவரது மனைவி செல்வியும் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
இதற்காக கணவன், மனைவி இருவரும் கடந்த சில நாட்களாக வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ராஜ்குமார் தனது காரில் ராமசாமிநாயக்கன்பட்டியில் இருந்து உத்தமபாளையம் நோக்கி காரில் சென்றார். காரை கண்ணன் ( வயது 38) என்பவர் ஓட்டினார். உத்தமபாளையம்-கோகிலாபுரம் சாலையில் குளத்துகரை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடப்பதால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
கார் அந்த இடத்தில் சென்றபோது சாலையின் நடுவே பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பாம்பு மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி வயலுக்குள் பாய்ந்தது. இதில் ராஜ்குமாரும், கண்ணனும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும் கார் மோதியதில் மின்கம்பம் முறிந்தது.
இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.