ஊரப்பாக்கத்தில் சிமெண்டு சாலை அமைக்க கோரி - பொதுமக்கள் முதல் அமைச்சருக்கு மனு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள செல்வராஜ் நகர், லட்சுமி அவென்யூ மற்றும் சுரேஷ் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளனர்.

Update: 2019-12-23 22:00 GMT
வண்டலூர்,

ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள செல்வராஜ் நகரில் உள்ள அப்துல் கலாம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பெரியார் சாலை 1-வது தெரு, 2, 3, 4, 5 ஆகிய தெருக்கள் மற்றும் செந்தமிழ் நகர் சாலை, லட்சுமி அவென்யூ 1 மற்றும் 2-வது தெரு, சுரேஷ் நகரில் கணபதி தெரு, மசூதி தெரு, ஆகிய இடங்கள் கடந்த 25 ஆண்டு காலமாக மண் சாலையாக இருந்து வருகிறது.

இதனால் மழைக்காலங்களில் மண் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்பட பலரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்த சாலையை கடந்து செல்லும் போது, வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். ஏனென்றால் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் செல்வராஜ் நகர், லட்சுமி அவென்யூ மற்றும் சுரேஷ் நகர் உள்ளிட்ட இடங்களில் தெருக்களில் தெருவிளக்குகள் பழுதடைந்து வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இந்த மண்சாலையை சிமெண்டு சாலையாக மாற்றி அமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்