ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு புதுச்சேரியில் உற்சாக வரவேற்பு

புதுவை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2019-12-23 23:15 GMT
புதுச்சேரி, 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப் பயணமாக புதுச்சேரி வந்துள்ளார். சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் புதுவை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவருக்கு புதுவை அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டரை விட்டு இறங்கியதும் அவரை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச் சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணி கண்டன், ஜெயமூர்த்தி, ஜான் குமார், கீதா ஆனந்தன், வெங்கடேசன், என்.எஸ்.ெஜ.ஜெயபால், சுகுமாறன், கோபிகா, சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து காரில் ஏறி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்கலைக்கழகத்துக்கு வந்து அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அதன்பின் கவர்னர் மாளிகைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

மாலை 5 மணி அளவில் அவர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசனம் செய்தார். அரவிந்தர், அன்னை பயன்படுத்திய அறைகளையும் அவர் பார்வையிட்டார். அவருக்கு ஆசிரம நிர்வாகம் சார்பில் அரவிந்தர் குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அதன்பின் ஆரோவில் சென்றார். அவரை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, ஆரோவில் பவுண்டேசன் அதிகாரி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாத்ரி மந்திரில் சிறிது நேரம் தியானம் செய்தார். அதன்பின் அவர் கவர்னர் மாளிகைக்கு வந்தார். கவர்னர் மாளிகையில் தங்கியுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார்.

காரைக்கால் சனிபகவான் கோவிலில் சாமி கும்பிடும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

மேலும் செய்திகள்